Wednesday, April 2, 2014

பன்னிரண்டு வயது சிறுவன்

        பன்னிரண்டு வயது சிறுவன்.புலம் பெயர்ந்து நிற்கிறேன்.ஆறாம் வகுப்பு சேரவேண்டும்.பெரியப்பா கடைசி இரண்டு பிள்ளைகளான சேஷு,சூரி இருவரும் திருச்சி இ.ஆர். மேல்நிலை பள்ளியில் படிக்கிறார்கள்.நாங்கள் ஸ்ரீரெங்கம்  ஸ்ரீனிவாச ராவ் தெருவில் வசிக்கிறோம்.இ.ஆர்.பள்ளியில் இடமில்லை.ஆகையால் திருச்சி டவுன் ஸ்டேஷன்பக்கத்தில் உள்ள உருமு தனலட்சுமி பள்ளியில் இடமிருந்தது.ரயிலில் சீசன் பாஸ் எடுத்து செல்லவேண்டும்.பெரியப்பா மூத்த மகன் சேதுராமன் ஆடிட்டருக்கு  படிக்கிறான்.அவருடன் பள்ளியில் சேர சென்றேன்.சிறிய பரீட்சை வைத்தார்கள்.அதில் தேர்ச்சி பெற்று பள்ளியில்  சேர்ந்தேன்.

Tuesday, April 1, 2014

அம்மாவின் நினைவு

அம்மாவின் நினைவு நெஞ்சைவிட்டு அகலுமா?பெரியம்மா நல்லவங்கதான்.ஆனாலும் அம்மாவாக முடியுமா?சேஷு,சூரி,காமாக்ஷி,பேபி 
சேதுராமன் எல்லோரும் நன்றாக பழகினார்கள்.திருச்சிக்கு போன இரண்டாவது நாளே வீட்டில் எனக்கு என்ன வேலை என்று புரிந்தது.சப்பாணி என்ற வேலைக்காரன் இருந்தான்.தினமும் மாலை 50,60 குடம் தண்ணீர் கொல்லையில் உள்ள கிணற்றிலிருந்து இறைத்து தருவதை உள்ளே உள்ள ட்ரம்மில் கொண்டு வந்து கொட்டவேண்டும்.இந்த வேலையை என்னை விட்டு தன குழந்தைகளிடம் ஏன் சொல்லவில்லை?என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.அதான் அம்மாவுக்கும்,பெரியம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த விஷயம் பெரிய்ப்பவுக்குத் தெரியாது.

Monday, March 31, 2014

அம்மாவை பிரிவது

       அம்மாவை பிரிவது எத்தனைக் கொடுமை.இப்போது நினைத்தாலும் நெஞ்சு கொதிக்கிறது.பத்து வயது மகன் அம்மாவைப் பிரிந்து படிப்பிற்காக வெளியூர் செல்வது எவ்வளவு கொடுமை.வெளியில் சொல்லமுடியாமல் மனதிற்குள் அழுகிறேன். 

      பழைய துணி மணிகளை ஒரு பையில் திணித்துக் கொண்டு அம்மாவையும் சகோதரிகளையும் பிரிந்து சூரியுடன் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

     நானும் படித்து பெரிய மனிதனாக வேண்டும் என்ற அம்மாவின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டு புறப்பட்டேன்.இந்த நேரத்தில் என் அம்மா ஒரு தடவை idal nalamillathu இருந்தபோது நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.சிறுவயதில் காவேரி ஆற்றங்கரையில் இருக்கும் டூரிங் சினிமா கொட்டகையின் திரைக்குப் பின்புறம் காற்றில் திரைத் தூக்கும்போது நானும் என் அக்காக்களும் பார்த்து குதூகலிப்போம்  காவிரி ஆற்றின் மணலில் இரவு எட்டு மணி அளவில் உட்கார்ந்திருப்போம்.காற்றில் திரைக்கு பின் பக்கம் இருக்கும்துணி தூக்கும் போது சினமா திரை தெரியும்.
      சினிமா தெரிகிறது என்று குதிப்போம்.சினிமா பார்க்க வேணும்  என்று அம்மாவிடம் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு ஒரு நாள் இரவு காது வலியுடன் ,துடித்துக்கொண்டிருக்கும் போது 'அம்பி, நீ சினிமா பார்க்க வேண்டும் enru சொன்னாயே.நாளை தஞ்சாவூரில் பூப்பல்லாக்கு.போய் பார்த்து வா.அத்துடன் ஒரு சினிமாவும் பார்த்து வா."என்றாள்.ஒரு ரூபாய் செலவுக்கு பணமும் கொடுத்தார்கள்.மறுநாள் மாலை ரூபாயை டிராயரில் போட்டுக்கொண்டு தஞ்சாவூர் நடந்து சென்றேன்.இரவு இரண்டாவது ஆட்டம் "வாழ்க்கை"என்ற சினிமா பார்த்தேன்.அதில் வைஜயந்திமாலா ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாட்டு பாடிய காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது.பிறகு பூப்பல்லாக்கு இரவு பார்த்து விட்டு விடியற்காலை திருவையாற்றிற்கு திரும்பி சென்றேன்.அந்த நிகழ்ச்சி இன்னும் ஞாபகம் உள்ளது.

பெரியப்பா மகள்கள்.

      பெரியப்பாவிற்கு நான்கு மகள்கள்.ஜானகி மூத்தவள்.கௌரி அடுத்தவள்.இருவருக்கும் திருமணமாகி விட்டது.ஜானகி கணவன் திரு பாலக்ருஷ்ணன்.மணப்பாறையில் ரயில்வேயில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைப பார்த்து வந்தார்.இவர்கள் வீட்டில் சிலபலகாலம் அஞ்ஞாதவாசம் இருக்க நேரிட்டது.அதைப்பற்றி பிற்பாடு சொல்கிறேன்.கௌரியின் கணவர் ஒரு மிராசுதார்.திருவையாறு பக்கத்தில் உமையாள்புரம்.இவருடன் அதிக பழக்கமில்லை.ஆனாலும் திருவையாறு தியாகராஜ உத்சவத்தில் அடிக்கடி சந்தித்து இருக்கிறேன்.நல்ல மனிதர்.என் சங்கீத ஆர்வத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.மற்ற இரண்டு மகள்கள் பேபி,காமாக்ஷி ஆவர்.பேபி கணவர் கோவிந்தராஜன்.வக்கீல்.மதுரை டவுன் ஹால் ரோட்டில் குடியிருந்தார்.தற்போது உயிருடன் இல்லை.பேபி இருக்கிறார்.என்னைவிட ஒரு வயது மூத்தவர்.காமாக்ஷி கணவர் என்ன வேலை பார்த்தார் என்று த்தெரியவில்லை. காமாக்ஷி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்

பெரியப்பாவின் மகன்கள்

   பெரியப்பாவின் மகன்கள் 

   பெரியப்பா சுவாமிநாத அய்யரின் கடைசி பையன் சேஷு என்ற ஆதிசேஷன்.இவன் எதுவும் படிக்கவில்லை.பத்தாவது.படித்ததோ
டு சரி.அதற்கு பிறகு வீட்டை விட்டு ஓடிவிட்டான்.எங்கு போனான் என்று தெரியவில்லை.பம்பாய் போய் ஒரு சேட்டிடம் வேலைக்கு சேர்ந்து அவருடைய பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டான்.இவன் பின்னாளில் பெரிய கட்டிட ஒப்பந்தக் காரராக ஆனார்.தற்போது பார்சன்(Parsn) என்ற பிரபல கம்பெனி எம்டி Managing Director ஆக உள்ளார்.இவர் என்னைவிட இரண்டுவயது இளையவர். 



      அடுத்த பையன் சூரி என்ற சூரியநாராயணன்.இவன் என்னைவிட நான்கு வயது மூத்தவன்.இவன்தான் என்னை திருவையாற்றிலிருந்து திருச்சிக்கு படிக்க கூப்பிட்டு கொண்டு போனவன்.இவனுக்கு படிப்பு வரவில்லை.வீட்டைவிட்டு அடிக்கடி ஓடிப்போய் விடுவான்.எனக்கு தெரிந்து ஒரு தடவை தஞ்சாவூருக்கு ஓடிப் போய்விட்டான்.அங்கிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வாசலில் இருப்பதாகவும் கூப்பிட்டுக் கொண்டு போகும்படி தொலைபேசியில் தெரிவித்தான்.பெரியப்பா போய் கூப்பிட்டு வந்தார்.பின்பு ஒரு தடவை கரூர் போய் ஒரு சிற்றுண்டி சாலையில் வேலை பார்ப்பதாக போஸ்ட் கார்டில் எழுதினான்.பெரியப்பா சென்று அழைத்து வந்தார்.இரண்டு முறையும் வீட்டு வாசலில் வைத்து கோவணம் அணிந்து நிற்க வைத்தார்.அவன் ஒவ்வொரு முறையும் வீட்டில் ஏதாவது திருடிக்கொண்டு போய்விடுவான்.பெரியப்பா என்னையம் அவனுடன் ஒப்பிட்டு பேசுவார்.அதனால் ஆத்திரப்படுவான்.அவன் வாழ்க்கையில் பெரிதாக முன்னேறவில்லை.எதோ கடை வைத்து பிழைத்துக் கொண்டான்.இப்போது பம்மலில் இருக்கிறான்.அவனை ஒரு திருமணத்தில் பார்த்தேன்.

      பெரியப்பாவின் மூத்த மகன் சேதுராமன்.இவன் என்னைவிட மிக மூத்தவன்.இவன் ஆடிட்டர் வேலைக்குப் படித்தான்.பாஸ் செய்யவில்லை.ஆனாலும் ஆடிட்டர் வேலை பார்த்து வந்தான்.நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ஒரு நாள் என்னிடம் டோபி கருப்பையா வீட்டுக்கு சென்று உருப்பிடிகளை வாங்கி வரச்சொன்னார்.எனக்கு அப்போது 10 வயதிருக்கும்.கருப்பையா வீடு ஸ்ரீ ரெங்கதில் இருந்தது. நாங்கள் ஸ்ரீரெங்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஸ்ரீனிவாச ராவ் தெருவில் இருந்தோம்.டோபி வீட்டுக்கு போவதை மறந்துவிட்டேன்.மாலை வந்தவுடன் கேட்டார்.என் தலையில் குட்டு வைத்தார். நான் ரோசப்பட்டுக்கொண்டு உடனே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கருப்பயா வீட்டை தேடிக்கொண்டு போனேன்.எப்பொடியோ அவர் வீட்டைகண்டுபிடித்து வாங்கி விட்டேன்.இரவு நேரமாகிவிட்டதால் கவலைப் பட ஆரம்பித்து விட்டார்ககள்.என் வாழ்க்கையில் பல கட்டங்களில் இவரோடு பழக நேரிட்டது.அதைப்பற்றி அவ்வப்பொழுது சொல்கிறேன்.இவர் இப் பொழு து உயிருடன் இல்லை/

Tuesday, March 25, 2014

வைரத்தோடு!ரெயிலே! ரெயிலே!

   ரெயிலே! ரெயிலே!


   என் அம்மா இள வயதிலேயே கணவரை இழந்தவர்.அவரிடம் வைரத்தோடு இன்னும் பல தங்க நகைகளும் இருந்தன.வைரத்தோட்டை பத்திரமாக வைதிருக்கும்பொருட்டு இதயம் பேசுகிறது மணியனின் அம்மா,அதாவது என் சித்தியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருந்து என்  அக்கா திருமணத்தின்போது வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தார்.

     ஆனால் என் மூத்த அக்கா கல்யாணத்தின்போது கேட்டதில் அவர் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. பிறகு என் இளைய அக்கா கல்யாணத்தின்போது தங்க நகைகளாக கொடுத்தார்.

      என் தாயாரின் அண்ணா திரு வெங்கடராம அய்யர்.தஞ்சாவூரில் கூட்டுறவுத்துறையில் உதவி ஆய்வாளராக இருந்தார்.அவரும் என் குடும்பத்திற்கு அவ்வொப்பொழுது உதவி செய்து வந்தார்.என் சிறிய வயதில் தஞ்சாவூர் சென்ற போது ரயிலைப் பார்க்கவேண்டும் என்று என் அம்மாவை நச்சரிக்க மாமாவிடம் சொல்லிக் கூப்பிட்டுப்போகச் சொன்னார்.
 
      மாமா ரயில் நிலையத்திற்கு ஒரு மைல் தூரத்திலிருந்து சுட்டிக் காட்டி 'அதான் ரயில்'என்றார்.எனக்கு மனமில்லாமல் திரும்பினேன்.அந்த ஏமாற்றம் இதுநாள்வரை ஞாபகம் உள்ளது

இதயம் பேசுகிறது மணியன்

 இதயம் பேசுகிறது மணியன் 


       திருச்சிக்கு 6 ம் வகுப்பு படிக்க போகுமுன் என் உள்ளத்தில் உள்ள சில,பல எண்ணங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன்.ஏனென்றால் அவை என்னுடடைய 77 ஆண்டு வாழ்க்கையில் எப்போது நிகழ்ந்தன என்று சரியாக எனக்கு தெரியாது.அவை என் எட்டு வயதுலோ அல்லது பதினாறு வயதுலோ நடந்திருக்கலாம்.பின்னாளில் நான் எழுதும்போது அவைப பற்றி எழுத மறந்து விட சந்தர்ப்பம் ஏற்படும்.ஆகவே இப்போதே எழுதிவிடுகிறேன்.

       இதயம் பேசுகிறது மணியன்.இவர் என் தாயின் தங்கை தர்மாம்பாள் புதல்வராவார்.தந்தை சீதாராம அய்யர் சென்னை போர்ட் டிரஸ்ட் -ல் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு ஆனந்த விகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் உறவினர்.மணியனுக்கு 20 வயது இருக்கும்.ஒரு நாள் திருவையாறுக்கு திடீரென்று மூட்டை முடிச்சுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.காரணம் பின்னால் தெரிந்தது.

       சென்னையில் மணியனுடைய சிநேகிதர்களுடன் சேர்ந்து சினிமா
 படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டதால் போலிசுக்கு பயந்து எங்கள் வந்திருக்கிறார்.எங்கள் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் மாலையில் திருவையாறு கும்பகோணம் சாலையில் பல மைல் தூரம் நடந்து போவோம்.அப்போது ரோட்டின் இரு மருங்கிலும் உள்ள புளிய மரங்களை வியந்து பாராட்டுவார்.

      இந்த புளிய மரங்களைப் பற்றி அவருடைய கதைகளில் எழுதி இ
ருக்கிறார்.அவர் எங்கள் வீட்டில் ஆறேழு மாதங்கள் இருந்தவிட்டு புறப்பட்டு போனார்.அதற்குப் பிறகு பல தடவை மணியனை சந்தித்திருக்கிறேன்.அதைப்பற்றி அவ்வப்போது சொல்லுகிறேன்.

Monday, March 24, 2014

குடுமி மகாத்மியம்

 குடுமி மகாத்மியம் 

     ஆறாவது படிப்பிற்காக நான் திருச்சிக்கு புறப்படும் முன்பு நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.நான் திருவையாற்றுக்கு வரும் முன்பே குடுமி வைத்திருந்தது தெரியும்.அந்த குடுமி நாலாவது படிக்கும்வரை தொடர்ந்தது.நண்பர்கள் பலரும் கிண்டல் செய்ததால் குடுமியை எடுத்து கிராப்பு வைப்பது என முடிவு செய்தேன்.என் அம்மாவிடம் சொன்னவுடன் எதிர்ப்பு சொன்னார்கள்.முக்கிய காரணம் பெரியப்பா.அவர் விரும்பமாட்டார்.என் அக்காக்கள் இருவரும் பெரியப்பா திருச்சியில் இருக்கிறார் அவர் எப்போது திருவையாறுக்கு வருவாரோ அப்போது பார்த்துகொள்ளலாம் என்றார்கள்.

      என் அம்மா அரை மனதுடன் சம்மதம் தெரிவித்தவுடன் அம்பட்டனைக் கூப்பிட்டு குடுமியை காலி செய்தேன்.என் சகோதரிகள் இருவரும் என்னை விட இரண்டு,நான்கு வயது வித்தியாசம் உள்ளவர்கள்.மூத்தவர் பெயர் சுப்பலக்ஷ்மி.முத்து என்று கூப்பிடுவோம்.அடுத்தவர் கமலா.பாப்பா என்று கூப்பிடுவோம்.இருவரும் முறையே ஆறாவது,ஏழாவது வகுப்பு படித்தார்கள்.திருவையாற்றிலே வடக்கு தெருவில் கிறிஸ்டியன் மிஷினரி பள்ளிக்கூடம்,.பெண்கள் பள்ளி.வாத்தியார்கள் எல்லோரும் பெண்கள்.தலையில் வெள்ளைத் துணி போர்த்தியிருப்பார்கள்.மாணவிகள் 'அம்மாங்க'என்றுதான் கூப்பிடுவார்கள்
   
   .தேர்முட்டி பள்ளியில் படிக்கும்போதே அம்மன்கோவில் கிழக்கு சுவரை ஒட்டி தோட்டம் போடுவோம்.அப்போதிறிந்தே எனக்கு செடி,மரம் என்றால் உயிர்.இந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.திருவையாற்றில் வருடாவருடம் தியாகராஜர் உத்சவம் நடக்கும்.நாங்கள் இருந்த பாவாசாமி அக்ரஹார தெருவில் முக்கில் ஒரு அனுமார் கோவில் உண்டு.அதிலும் வருடாவருடம் அனுமத் ஜெயந்தி நடக்கும்.அனுமார்கோ.வில் நிர்வாகத்ததை எஸ்.வெங்கிட்டு என்பவர் கவனித்து வந்தார்.

     பிற்காலத்தில் எனக்கு மிகவும் நண்பரானார்.அனுமார்கோவில் உத்சவத்தில் அண்ணாசாமி பாகவதர் கதாகாலக்ஷேபம் செய்வார்.அண்ணாசாமி பாகவதர் எங்கள் தெருவில்தான் இருந்தார்.அவர் இரண்டாவது மகன் சங்கரன்.பின்னாளில் அவர் என் ஆத்ம சிநேகிதன்.அவர் திருச்சி சென்ஸ் ஜோசப் காலேஜ் படிப்பு முடித்து திருவையாறு ஸ்ரீனிவாச ராவ் ஹை ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றார்.சென்ற வருடம் திருவையாறு போன  போது அவரை பார்க்க முயன்றேன்.முடியவில்லை.அவர் ஊரில் இல்லை.

   குரு வீட்டிற்கு பக்கத்துக்கு வீடு வைத்யனாதபாகவதர்.அண்ணாசாமி பாகவதர் தம்பி.அவருக்கு இரண்டு மகன்கள்.மூத்தவன் பெர்யர் பாபு.அடுதவவ்ன் பெயர் ஞாபகமில்லை.பாபு கோலிகுண்டு அபாரமாக விளையாடுவான்.குறி வைத்து அடித்தான் என்றால் சொடேல் என்று அடிப்பான்.அதே மாதிரி பம்பரமும்.ஆக்கு வைத்து விளையாடுவான்.
 
     அனுமார்  கோவில் பக்கத்தில் கிட்டு வாத்தியார் வீடு.அண்ணாசாமி பாகவதருடைய இன்னொரு தம்பி.எவர் மிருதங்கம் வாசிப்பார் என்றால் வைத்யநாத பாகவதர் பின்பாட்டு.ஒரு தடவை அண்ணாசாமி பாகவதர் பூணி வாண்டையார் கூப்பிட்டு கதாகாலக்ஷேபம் செய்துவிட்டு வந்தவுடன் ரூபாய் 3000 வருமானம் வந்தது என்று பேசிக்கொண்டார்கள்.ரூபாய் 3000என்பது அந்த காலத்தில் அதாவது 1948-49 கலீல் பெரிய தொகை.கிட்டு பாகவதர் வீட்டில் பாலக்காட்டு மணி அய்யர் தங்குவார்.அதே மாதிரி ஜி என் பாலசுப்ரமணியம் அண்ணாசாமி பாகவதர் வீட்டில் தங்குவார்.

    கிட்டு பாகவதற்கு ஒரே மகன்.அவன் ஆர் .எஸ்.எஸ்.சில் இருந்தான்.நானும் இன்னும் பல பேர்களும்  அம்மன் கோவில் பின் பக்கம் ஆர்.. எஸ்.எஸ். ட்ரில் செய்வோம்.அது சில வருடம் நடந்தது.

    பக்கத்து வீடு அருந்ததிஉடையது .என் சகோதரிகளின் நண்பி.அவர் தம்பி குரு.அவர்கள் இப்போது அந்த வீட்டில் இல்லை. சென்ற முறை போனபோது தெருவின் முடிவில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார்.

     அனந்து.சேஷாராம அய்யர் மகன்.எதுத்த வீட்டுக்கு பக்கத்து வீடு.எப்போதும்  குட்டி ரேடியோ கையில் வைத்துக்கொண்டு கிரிக்கெட் கமெண்டரி கேட்டுகொண்டிருப்பான்.ஹஜாரே அவுட் என்பான்.கடைசி காலத்தில் பயித்தியம் பிடித்துவிட்டது என்று சொன்னார்கள்.பாவம்.

      எதுத்த வீட்டில் இருந்தவர் பத்து என்ற பத்மநாபன்.அவன் அக்கா ருக்கு.அண்ணன் நரசிம்மன்.பத்மநாபன் திருச்சியில் பி ஏ படித்து ஸ்ரீனிவாச ராவ் ஹை ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரிராக ஒய்வு பெற்றார்.தற்போது அனுமார் கோவில் பக்கத்தில் உள்ள கபிஸ்தலம் என்ற பெரிய வீட்டை வாங்கி சௌக்கியமாக இருக்கிறார்.நான் சென்ற போது அவரை பார்த்துவந்தேன்.

Friday, March 21, 2014

குடும்ப சொத்துக்கள்

குடும்ப சொத்துக்கள்
     திரு சுவாமிநாத அய்யர். இவரைப்பற்றி சொல்வதற்கு முன்னால் எங்கள் குடும்ப சொத்து விபரத்தைப் பற்றி சொல்லவேண்டும்.என் தாத்தா என் காலமாவதற்கு முன்பே காலமாகி விட்டார்.ஆகையால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை என் தந்தை,சித்தப்பா பெரியப்பாக்களும் சமமாக பிரித்துக்கொண்டார்கள்
     என் பாட்டி என் தந்தைக்கு பின்னால் காலமாகியதால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை என் தந்தை தவிர சித்தப்பாவும்,பெரியப்பாக்களும் பங்கு போட்டுக்கொண்டார்கள்.
     இதில் சுவாமிநாத பெரியப்பாக்கு வருத்தம்.என் அப்பா இறக்கும் தருவாயில் சுவாமிநாத பெரியப்பாவிடம் எங்கள் குடும்பத்தை பார்த்துகொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.என் அப்பா உயிருடன் இருக்குபோது பெரியப்பாவை தோளில் தூக்கி திரிவாராம்.இதை சித்தப்பா சொல்லி எனக்கு தெரியும்.என் தாத்தா வழி கிடைத்த சொத்தின் மூலம் கிடைத்த வருவாயைத்தான் சித்தப்பா வருடா வருடம் கொடுத்துவந்தார்.தவிர சுவாமிநாத பெரியப்பாவும் தன பங்குக்கு சில மூட்டை நெல்லை கொடுப்பார்.

     என் அப்பா எனக்கு ஆறு மாதம் இருக்கும்போதே காலமாகி விட்டார்.என் அப்பாவுக்கு வெறும் அறுநூறு ரூபாய் இன்சூரன்ஸ் பணம் மட்டும் கிடைத்தது.தவிர என் தாத்தாவின் சொத்தில் பங்கு கிடைத்தது.சொத்தில் மூன்றில் ஒரு பங்கு என் மூத்த சகோதரி கல்யானத்தின்போதும்,ஒரு பங்கு என் இரண்டாவது சகோதரி கல்யானத்தின்போதும் விற்கப்பட்டது.மீதி ஒரு பங்கு எனக்கு 22 வயதிருக்கும்போதும் விற்கப்பட்டது.

     இன்சூரன்ஸ் பணம் ரூபாய்600-ல் வந்த வட்டியில் ரூபாய் 10 மட்டும் என்அம்மா வீட்டு செலவு செய்வார்கள்.தவிர வீட்டில் இருக்கும் நெல்லை விற்று செலவுக்கு வைத்துகொள்வார்கள்.சுவாமிநாத பெரியப்பா அவ்வப்பொழுது ரூபாய் 10அனுப்புவார்கள் . நான் ஐந்தாவது வகுப்பு வரை பாலகணபதி பள்ளியில் படித்தேன். சுவாமிநாத பெரியப்பா திருச்சி ஸ்ரீரங்கத்தில் பொதுப்பணி துறையில் எஞ்சினியர் வேலை பார்த்தார். ஆறாவது வகுப்பிலிருந்து திருச்சியில் படிப்பதற்காக என்னை திருச்சிக்கு கூட்டிபோக அவர் இரண்டாவது பையன் சூரியை திருவையாற்றுக்கு அனுப்பினார்.குடும்ப சொத்துக்கள்

Sunday, March 16, 2014

சித்தப்பாவும்,பெரியப்பாக்களும்

     சித்தப்பாவும்,பெரியப்பாக்களும் 

     எனக்கு ஒரு சித்தப்பா சாம்பமூர்த்தி அய்யர்.இவர்தான் என்னை ஆரம்பபள்ளியில் சேர்த்துவிட்டவர்.எங்கள் நிலங்களையும் மற்றும் பெரியப்பாக்களின் நிலபுலன்களையும் கவனித் துவந்த்தவர்.

     எங்களுக்கு வருஷம்தோறும் 20 மூட்டைகள் நெல் மற்றும் தேவியான உளுந்து துவரம்,பாசிப்பருப்பு கொண்டுவந்து கொடுப்பார். அவருடன் ரொம்ப இருந்தது.வருடங்கள் தொடர்பு இருந்தது.

      எர்ணாகுளம் வெங்கடராம அய்யர்.இவர் கொச்சியில் வேலைபார்த்தவர்.அதனால் இந்த அடைமொழி.என் தகப்பனார் காலமான பிறகு அவருடன் எங்களுக்கு உறவு இல்லை.அவர் ஒய்வு பெற்ற பிறகு கணபதி அக்ரஹாரதில் உள்ள பரம்பரை வீட்டில் இருந்தார்.

      ஒரு தடவை அவர் வீட்டிற்கு போனபோது அவர் ஊஞ்சல் ஆடிகொண்டிருந்தார்.ஒரு மழை நாளில் அவர் திருவையாறு கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தார்.நான் என் அம்மாவுடன் பின்னால் போனவன் அவர் குடையை கை இடுக்கில் வைத்திருந்ததை பிடித்து இழுத்தேன்.அவர் திரும்பிப் பார்த்து மறைத்து விட்டு போய்  விட்டார்.அதுதான் அவரை கடைசீயாக பார்த்தது.

     அவருக்கு இரண்டு பெண்களும்,ஒரு மகனும்.ஒருபெண் விதவை.கணபதி அக்ரஹாரத்தில் தனி சொந்த வீட்டில் இருந்தார்.மற்ற இரண்டு பெரும் இருப்பது ரொம்ப வருஷத்திற்கு பிறகு தெரியும்.அதை பிற்ப்பாடு சொல்கி றேன்.இவர் எப்போது இறந்தார் என்றுகூட ஞாபகமில்லை.

      அடுத்தவர் கணபதி.இவர் ஸ்டேட் பாங்க்கில் வேலைப் பார்த்தார்.தஞ்சாவூரில் குடியிருந்தார். இவரை கஞ்சப் பெரியப்பா என்று கூப்பிடுவோம்.இவருடனும் எந்த பேச்சு வாரத்தையும் கிடையாது. நான் எட்டாவது படிக்கும்போது ஒரு நாள் என் அம்மா சொன்னதின் பேரில் தஞ்சாவூர் சென்றேன்.எட்டு மைல் தூரம்தான்.ரோட்டோரம நடந்து சென்றேன்.ஸ்கூல் பீஸ் மாதத்திற்கு அரை சம்பளம் மூன்றரை தான்.அதைக் கேட்டு வாங்கிவரத்தான் போனேன்.

      என் பெரியம்மா குமுட்டியில்  எதோ செய்து கொண்டிரிருந்தார்கள்.நான் வந்த விஷயத்தை சொன்னவுடன் சிசர் டப்பாவைக் குலுக்கி அதிலிருந்து சரியாக மூன்றரை எடுத்து கொடுத்தார். அதன் பிறகு ஜன்மத்தில் நான் அவர்களைப் பார்க்கவில்லை.

      அவர்களுக்கு ஒரு பெண்ணோ அல்லது பிள்ளையோ.அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பின்னாளில் அறிந்தேன்.

      இன்னொரு பெரியப்பா என் தந்தைக்கு பின்பு காலம்கி விட்டிருந்தார்.அவர் பெயர் தெரியவில்லை.அவருடைய மனைவி கணபதி அக்ரகாரத்தில் குடியிருந்தார்.அவருக்கு  பாப்புணு என்றொரு மகள்.எனக்கு மிக மூத்தவள்.திருச்சியில் ஸ்டேட் பங்கில் வேலை பார்த்தவரை கல்யாணம் செய்தவர்.

      என் அம்மா அவர்கள் குடும்பம் மற்றும் சித்தப்பா சாம்பமூர்த்தி குடும்பத்தையும் சென்று பார்க்கும்போதும் நானும் போவேன்.கணபதி அக்ரஹாரம் திருவையாற்றில் இருந்து எட்டு மைல்.நடந்தே போவோம்.சாம்பமூர்திக்கு சுப்புணி,வரது,இன்னொரு மகன் (பெயர் ஞாபமில்லை).அவர்கள் தாத்தா ஊரான மெலட்டூர் கிராமத்தில் படித்து வந்தார்கள்.  

     எனக்கு இன்னொரு பெரியப்பா இருந்தார்.அவர் பெயர் திரு சுவாமிநாத அய்யர்.அவர் எங்கள் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்து வந்தார். அதைப் பற்றி பிற்பாடு சொல்கிறேன் .


  எனக்கு இன்னொரு பெரியப்பா இருந்தார்.



Tuesday, March 11, 2014

இப்போது மாங்குடி சத்திரம்

        61 வருடங்கள் கடந்து விட்டன.இப்போது மாங்குடி சத்திரம் எப்படி இறக்கிறது?சமீபத்தில் சென்று பார்த்தேன்.சத்திரம் என்பது பொதுவாக விற்கப் படக்கூடாது.ஆனால் அதை இவர்கள் விலைக்கு ,விலைக்கு வாங்கி குறுக்கே சுவர் எழுப்பி இரண்டாக பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தெருவும் அறுபது ஆண்டுகளில் உயர்ந்து திண்ணை உயரம் குறைந்து காணப்படுகிறது.திண்ணை மரச் சட்டத்தால் மூடப்பட்டுள்ளது.

      1943 - ம் ஆண்டு நான் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தேன்.பள்ளி தெரு முக்கில் அம்மன் தேருக்க்ப் பக்கத்தில் இருந்தது.தேர்முட்டிப் பள்ளிக்கூடம் என்று பெயர் பெற்றிரிந்தது. ஒருநாள் என் சித்தப்பா திருவாளர் சாம்பமூர்த்தி கணபதி அக்ரஹாரத்திலிருந்து வந்து பள்ளியில் சேர்த்து விட்டார்.பள்ளித தலைமை ஆசிரியர் அய்யங்கார்.பெயர் ஞாபகமில்லைy.அவர் என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தது ஞாபகம் உள்ளது.என் சித்தப்பாவும் அவரும் பால்ய நண்பர்கள்.சீட்டாத்தில்.

        என் சித்தப்பாவைப் பற்றியும் பெரியப்பாக்களைப் பற்றியும் பிற்பாடு சொல்கிறேன்.நான் தேர்முட்டிப் பள்ளியில் 5- வது வகுப்புவரைப் படித்தேன்.இப்போது அந்தப் பள்ளி பாலகணபதி ஆரம்பப் பள்ளி என்று பெயர பெற்று பக்கதிலேய அம்மன் சன்னதி தெருவில் இயங்கி வருகிறது.

       தேர்முட்டி பள்ளி ஒரு பெரிய மண் திண்ணையும் கீழே மண் தரையும் உள்ளது. மண் திண்ணையில் 3 முதல் 5வது வகுப்பும் மண் தரையில் 1 மற்றும் 2 வது வகுப்பும் இருந்தது. இரண்டாவது வகுப்பு வாத்தியார் பெயர காருகுடி மணி அய்யர்.மிகவும் கண்டிப்பானவர். மற்ற வாத்தியார்கள் பெயரஞாபகம் இல்லை.அங்கு படிக்கும்போதுதான் அம்மன்கோவில் சுவற்றின் பக்கத்தில் தோட்டம் அமைத்தோம்.அதிலிருந்து எனக்கு செடி கொடிகளின் மீது ஆர்வம் வந்தது.

Friday, March 7, 2014

மாங்குடி சத்திரம் யோகாம்பாள்.

         மாங்குடி சத்திரம் என்பது வீடுதான்.நாங்கள் அங்கு குடியேறினோம்.சத்திரம் என்பது பொதுவாக தர்மத்திற்கு ஏற்பட்டது.ஆனால் இது திருவையாறு பக்கத்தில் உள்ள மாங்குடி என்ற கிராமத்தில் வசித்து அந்த அண்ணா என்பவரால் நிர்வகிக்கப்பது.பாவசாமி அக்ரகாரம் என்பது மேற்கு கிழக்கு தெரு.இந்த தெருவில் 40 ம் இலக்கமுள்ள வீடு மாங்குடி சத்திரம்.இந்த தெருவில் பிரபல கதா
காலக்ஷேப வித்வான் ஸ்ரீ அண்ணாசாமி பாகவதர் குடியிருந்தார்

        மாங்குடி சத்திரம் இரண்டு திண்ணை உள்ளது.முதல் திண்ணை நீண்டது.இரண்டாவது திண்ணை அதில் பாதி இருக்கும்.அங்கு இரும்பு கேட்.அதைத் திறந்துகொண்டு. உள்ளே போனால் சுமார் 10 அடி நீளமுள்ள பாதை,இருபக்கமும் இரண்டு அடி அகலமுள்ள திண்ணை.அதன்பிறகு மரக்கதவு.மரக்கதவின் இடதுபக்கம் ஒரு அரை.ஒட்டி ஒரு குதிர்,வலதுபக்கம் இரண்டுஅறைகள்.இந்த மூன்று அறைகளை ஒட்டி பெரிய ஹால்.ஹல்லில் பத்தி திறந்த வெளி.

       ஹால் ஒட்டி இடது, வியது பக்கங்களில் முறையே இரண்டு அறைகள்.இத்துடன் முதல் கட்டு முடிகிறது.

       கதவைத் திறந்து போனால் இடது பக்கம் ஒரு குதிர்.அடுத்து கொள்ளை வழியும் மாடிப்படியும். அடுத்து கிணறும்,கிணத்தடியும்(திறந்தவெளி).இடது பக்கம் உள்ள அரை நாங்கள் குடியிருந்தோம்.இடதுபுறம் ஒரு வராந்தாவும் ஒட்டி இன்னொரு அரையும்.


       முதல் கட்டில் உள்ள அறையில் சத்திரத்தின் உரிமையாளரின் உறவினரான பெண்மணி குடியிருந்தார்.பெயர் யோகாம்பாள்.வயது 70 இருக்கும்.அவரை நாங்கள் கண்ணாடி பட்டி என்று கூப்பிடுவோம்.சோடா மூடி கண்ணாடி போட்டிருப்பார்.அவர்தான் சத்திர பாதுகாப்பாளர்.சத்திரத்தின் உரிமையாளர் மிகவும் இரக்ககுணமுள்ளவர்.நாங்கள் குடியிருந்த அறைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.நாங்கள் 1943 முதல் 1953 ம் வருடம் முடிய,அதாவது நான் எஸ்.எஸ்.எல்..சி. முடிக்கும் வரை.அதை கண்னாடிப்பாட்டியிடம் கொடுப்போம்

Tuesday, March 4, 2014

மாங்குடி சத்திரம்

      மூக்கரையனிடம் கடுக்கனை என் அம்மா வாங்கிய உடன் அவனை எல்லோரும் நையப் புடைத்தார்கள். 

      என் அம்மா நிறைய நகைகள் வைத்திருந்தார்கள்.அவைகளை பத்திரமாக வைத்திருக்கும் பொருட்டு இரவு படுக்கும்போழுது தலகானிக்கு அடியில் வைத்திருப்பார்கள்.

      ஒரு நாள் நாடு ராத்திரியில் கொல்லையில் பலர் ஓடிய சத்தம் கேட்டது.இனி இந்த ஊரில் இருப்பது சரியில்லை என்று கருதி திருவையாறு சென்று விட முடிவு செய்தோம்.  
      ஈச்சங்குடி காஞ்சி சங்கராச்சியார் பிறந்த ஊர்.ஒரு தடவை சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஈச்சங்குடிக்கு வந்தபொழுது நாங்கள் அவரைப் பார்த்தோம். ஈச்சன்குடியில் ஒன்றரை வருடம் இருந்தபிறகு திருவையாறுக்கு சென்றோம். 

      ஈச்சன்குடியில் என் அம்மா உடைய பெரியம்மா குடும்பம் இருந்தது.அதைப் பற்றி பின்னொரு நாளில் சொல்கிறேன்.திருவையாற்றில் பாவசாமி அக்ரகாரம் என்ற தெருவில் 40 இலக்கமுள்ள வீட்டில் குடியேறினோம்.இந்த வீட்டை மாங்குடி சத்திரம் என்பர்  என்பர் 

Monday, March 3, 2014

      எனக்கு இப்போது 77 வயதாகிறது. என்னுடைய அரை வயதில் தந்தை காலமாகிவிட்டார்.என்னுடைய சொந்த கிராமம் கணபதி அக்ரஹாரம்.அங்கிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ஈச்சங்குடி என்ற ஊருக்கு என் அம்மா மற்றும் நான் என் அக்காக்கள் இருவரும் குடிபெயர்ந்தோம்.என் அக்காக்கள் இருவர்க்கும் முறையே ஆறு,எட்டு வயதிருக்கும்.எனக்கு நான்கு.அந்த வயதிற்கு முந்தய எதுவம் ஞாபகம் இல்லை.

       நான் அப்போது குடுமி வைத்திருந்தேன்.நாங்கள் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம்.நான் அப்போது கடுக்கன் அணிந்திருந்தேன்.நான் அப்போதெல்லாம் வீட்டின் பின்புறம் விளையாடுவேன்.அப்படி ஒரு நாள் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது மூக்கறையன் என்பவன் மிட்டாய் ஒன்றைக் கொடுத்து என் கடுக்கனைக் கேட்டான்.அதன் பிறகு என் அம்மா கேட்டபோது மூக்கறையன் மிட்டாய் கொடுத்து கழட்டிக் கொண்டததைச் சொன்னவுடன் கடுக்கனை மூக்கரைனிடமிருந்து .........

நாளை தொடருகிறேன்